இலங்கையின் வடபுல நகரமாம் யாழ்ப்பாணத்தின் கொக்குவில் கிராமத்தில் உள்ள பொற்பதி வீதியின் மேற்காக "நாமகள் வித்தியாசாலை" அமைந்துள்ளது.
அந்நாளில் இப்பகுதிச் சைவப்பிள்ளைகள் தங்கள் கல்வி வளர்ச்சிக்காக தூர இடங்களிலுள்ள பாடசாலைகளுக்கு சென்றுவந்தனர். இதனால் பிள்ளைகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் மேலிட்ட பெரியோர்கள் திரு.ஆறுமுகம் வைத்தியர் திரு.சின்னத்துரை ஆகியோரின் பெரு முயற்ச்சியால் 1934ம் ஆண்டளவில் உருவானதே இப் பாடசாலை ஆகும்.
வைத்தியர் திரு.சின்னத்துரை தனது பரம்பரை காணிகளில் ஒன்றை இப்பாடசாலையை நிறுவுவதற்கு நன்கொடையாக வழங்கினார். திரு.ஆறுமுகம் ஊர்மக்களின் உதவியுடன் பாடசாலையை ஸ்தாபித்து முதல் ஆசிரியராகவும் கடமையாற்றி இப்பகுதிப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு வழிவகுத்தார் கல்வித்தெய்வமாம் சரஸ்வதிதேவியின் நாமத்தில் இக் கல்விக்கூடம் "நாமகள் வித்தியாசாலை" என அழைக்கப்பட்டு வருகின்றது. பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுனையாகவும் ஆலோசகராகவும் கடமை ஆற்றியவர் திரு.சி.முத்துவேலு ஆவர். "L" வடிவத்தில் அமைந்த பாடசாலைக் கட்டிடத்தில் ஆரம்ப காலத்தில் கீழ் வகுப்பக்கள் மட்டுமே நடைபெற்று வந்தன. அந்நாளில் இங்கு கல்வி கற்று வந்த மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றுக்கொண்டனர்.முன்னர் பரமேஸ்வராக் கல்லூரியாக விளங்கிய கல்விக்கூடமும் அதன் நிலப்பகுதியுமே இன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமாக விளங்குகிறது.
நாமகள் வித்தியாசாலைக்கு மாணவர்களின் வருகை அதிகரிக்கவே நடுத்தர வகுப்புக்களும் ஏற்படுத்தப்பட்டன. இக் காலகட்டத்தில் பாடசாலை, சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது.
1942ம் ஆண்டளவில் திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.கனகரத்தினம் அதிபராக நியமனம் பெற்றார். இவரைத் தொடர்ந்து திரு.ஆறுமுகம் அதிபரானார் பாடசாலையின் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பொதுமக்களும் பெற்றோர் - ஆசிரியர் சங்கமும் இணைந்து விஞ்ஞான கூடக் கட்டிடத்தைக் கட்டினர் இதனால் கட்டிடம் "ப" வடிவம் பெற்றது.
1977ம் ஆண்டில் திரு.நவரத்தினம் அதிபராக கடமை ஆற்றிய நாட்களில் நல்லூர்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.அருளம்பலம் அவர்களின் உதவியுடன் பாடசாலை காரியாலயமும் பாலர் வகுப்பற்கான கட்டிடமும் அமைக்கப்பட்டன. திரு.நவரத்தினத்தை தொடர்ந்து திருவாளர்கள் சரவணபவான், திருநாவுக்கரசு ஆகியோரிற்கு பின் தற்போது திரு.பொ.பத்மநாதன் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
நாமகள் வித்தியாசாலையில் இன்று முதல வகுப்புத் தொடக்கம் பதினோராம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். பத்து ஆசிரியர்கள் வரை கடமை புரிவதாகவும் அறிகின்றோம்.