‘வில்’ என்ற எச்சத்தில் முடிவடையும் ஊர்ப்பெயர்கள் சில இருக்கின்றன.
இணுவில், கோண்டாவில், கொக்குவில், நந்தாவில் போன்ற பெயர்கள் எப்படி ஏற்பட்டன என்பதற்கு சுவாரசியமான ஒரு கதையைச் சொல்லுவார்கள். நிச்சயம் இது கட்டுக்கதையாக தான் இருக்கும். ஆனாலும் ஏற்கக் கூடியதாக இருக்கின்றது.
முன்பொரு காலத்தில் அரசனும், அவனது தோழனும் குதிரையில் வேட்டைக்குப் புறப்பட்டார்களாம். வழியில் ஓரிடத்தில் கொக்கு ஒன்றை அரசன் அவதானித்தானாம். உடனே நண்பனிடம் “கொக்கு ஒன்று பறந்து கொண்டிருக்கின்றது வில்லைத் தா வேட்டையாடலாம்” எனக் கூறினானாம். வேகமாக குதிரையில் வந்து கொண்டிருந்ததால் நண்பனிடம் இருந்த வில்லைப் பறிப்பதற்காக நண்பனின் பெயரைச் சொல்லி “நந்தா வில்லைத் தா” என கோரினானாம். அவர்கள் வேகத்தில் வில்லைப் பெற முடியவில்லை. சிறிது நேரத்தின் பின் கொஞ்சம் கோபமாக “கொண்டா வில்” என அரசன் கத்தினானாம். இருந்தும் கொக்கை வேகமாக கலைத்ததால் வில்லை பெற இயலவில்லை. அதற்குள் கொக்கும் மறைந்து விட்டது. சோர்வுடன் “இனி வில் வேண்டாம்” என கூறினானாம்.
நண்பர்களே! மேலே பந்தியில் “...” அடையாளத்தில் காட்டப்பட்டிருக்கும் பெயர்களை சரியாக படியுங்கள். அதுவே மருவி கொக்குவில், நந்தாவில், கோண்டாவில், இணுவில் என மாறியதாக கூறுவார்கள். இந்த நான்கு ஊர்களும் அருகருகே இருக்கின்றன. வேகமாக குதிரையில் பயணித்த இருவரும் குறிப்பிட்ட நேரங்களில் அவ்விடங்களில் பயணித்திருக்க சந்தர்ப்பம் இருக்கின்றது.