பிரித்தானியாவில் வளர்ச்சி பெற்று வந்த நவீன மானிடவாதம், ஆங்கிலக் கல்வி வழியாகக் கிடைக்கப்பெற்ற மார்க்சியக் கருத்தியல், இந்தியாவில் எழுச்சி கொள்ளத் தொடங்கிய காந்திய நெறி முதலியவற்றால் ஊட்டம் பெற்ற கல்விமானாக ஹன்டி பேரின்பநாயகம் (1899 - 1977) அவர்கள் விளங்கினார். புலமை நிலையிலும் சமூக நிலையிலும் அவரது பங்களிப்புகள் தனித்துவமானவை.
புலமையாளராகவும் அதே வேளை ஒரு வினைப்பாட்டாளராகவும் விளங்கிய அவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆற்றல்மிக்க ஆசிரியராகவும் பின்னர் கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபராகவுமிருந்து கல்வி விரிவாக்கற் செயற்பாடுகளைப் பல நிலைகளிலே முன்னெடுத்தார்.மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய அவரது வினைப்பாடுகள் விரும்பி வரவேற்கப்பட்டன. கிறிஸ்தவப் பின்புலத்தில் வாழ்ந்து வளர்ந்த அவருக்கு கொக்குவில் இந்து கல்லூரியின் அதிபர் பதவி இந்துக்களால் விரும்பி வழங்கப் பெற்றமை யாழ்ப்பாணத்தில் நிலவிய மத நல்லிணக்கத்தின் குறியீடாயிற்று.
வைதீக இந்து மதத்தில் ஊறி வளர்ந்த கொக்குவில் மக்களும் அதனைச் சூழவுள்ள கிராமத்து மக்களும் அவரது கல்வித் தலைமைத்துவத்தை மனமுவந்து ஏற்றக் கொண்டமை இந்துக்களின் விசாலித்த உளப் பாங்கை வெளிப்படுத்தியது.
கொக்குவில் இந்துக் கல்லூரியை இலங்கைக்கே ஓர் எடுத்துக் காட்டான கல்லூரியாக மாற்றியமைப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பிற்பட்ட காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கல்விச்சீர் திருத்தங்களுடன் ஒப்புமை கொண்டிருந்தமையைக் குறிப்பிட முடியும்.
இலங்கையைப் பொறுத்தவரை 1972 ஆம் ஆண்டிலே மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் முற்போக்குத் தன்மை கொண்டவையாக அமைந்திருந்தன. இலங்கை முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொதுவான ஒரு கலைத்திட்டம் அந்த ஆண்டிலே அறிமுகம் செய்யப்பட்டது. சமநிலைக் கலைத்திட்டம் ஒன்றிணைந்த கலைத்திட்டம் முதலியவை அக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆனால் அதற்கு முன்னரே 1950 ஆம் ஆண்டுகளில் அவர் ஒன்றிணைந்த சமநிலைக் கலைத்திட்டத்தைக் கொக்குவில் இந்துக் கல்லூரியில் அறிமுகப்படுத்தினர். கலை, விஞ்ஞானம், அழகியல், தொழிநுட்பப்பாடம் என்ற அனைத்தையும் ஒருங்குசேர அங்கு கற்பதற்குரிய வசதிகள் அவரால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இலவசக் கல்வி வளர்ச்சி காரணமாகக் கிராமப்புறத்துச் சிறார்கள் ஆரம்பக் கல்வியை நிறைவேற்றிவிட்டு இடைநிலைக் கல்விக்கு நுழையும் பெருக்கம் ஏற்பட்டவேளை அவற்றுக்கு ஈடு கொடுக்கக் கூடியவாறு பல கல்லூரிகள் எழுச்சி கொள்ளத் தொடங்கின.
அந்த வகையிலே கூடிய மாணவர்களை உள்ளீர்க்கும் பொருட்டு அடிக்கட்டுமானங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்ட அவர் மலேசியா வரை சென்று உதவிகள் பெற்று உயர் மாடங்களையும் ஆய்வு கூடங்களையும் அரங்குகளையும் தமது கல்லூரியில் அமைத்துக் கொடுத்தார்.
முதன் முதல் யாழ்ப்பாணத்தில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட நெடு மாடிக் கட்டடத்தைப் பாடசாலைக்கென அமைத்த பெருமையும் அவரையே சாரும். அவரது பெரும் பணிகளுள் விதந்து பாராட்டப் படக்கூடியது யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் தொடர்பான நடவடிக்கைகளாகும்.
1924 ஆம் ஆண்டிலே கால்கோள் கொண்ட அந்த இயக்கம் அறிகைத் தளத்திலும் வினைப்பாட்டுத்தளத்திலும் பின்வரும் எழுச்சிகளை முன்வைத்து.
- இலங்கையின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து தேச நலனுக்காக உழைத்தல்.
- தீண்டமையை முற்றாக ஒழித்தல்.
- தாய் மொழியே கல்வி மொழியாக முன்னெடுத்தல்.
- சிங்கள மாணவர் தமிழ் மொழியையும் தமிழ் மாணவர் சிங்கள மொழியையும் கற்கச் செய்தல்.
- தேசிய மொழிகளில் விஞ்ஞானம் உள்ளிட்ட சிறந்த நூல்களை வெளியிடுவதற்கு முயற்சித்தல்.
- தேசிய கலை இலக்கியங்களை மீட்டெடுத்தல்.
- உள்ளூர்க் கைத்தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல்.
தொடர்பாடல் நிலையில் ஆங்கில மொழி மேலாதிக்கம் பெற்றிருந்த பிரித்தானியராட்சியின் எழு குழாத்தினரது மேடைகளில் ஆங்கிலமே பயன் படுத்தப்பட்டவேளை, ஆழ்ந்த ஆங்கில அறிவு வாய்க்கப்பட்டிருந்த பேரின்ப நாயகம் அவர்கள் இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சிகளிலே தமிழ் மொழியில் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து ஆங்கில மொழி வழியாகக் கற்ற புலமையாளர்கள் தமிழ் மொழியில் உரையாற்றலாயினர். அதாவது ஆங்கில மொழியிலே பேசுவதைப் பெருமையாகக் கருதியோர் பின்னர் தமிழ் மொழியிற் உரையாற்றுவதைப் பெருமையாகக் கருதினர்.
வாசிப்புப் பழக்கத்தை மாணவரிடத்து வளர்த்தெடுப்பதிலே அதிக அக்கறை காட்டிய அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல ஆக்கங்களை எழுதினார். அவர் எழுதிய ஜப்பானியப் பயணம் பற்றிய கட்டுரை பிரயாண இலக்கியத்துடன் நகைச்சுவையை இணைத்து எழுதப்பட்ட தனித்துவமான ஆக்கமாக அமைந்தது.
கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அந்த ஆக்கத்தைப் பெரிதும் பாராட்டியதாக தகவல் உண்டு. கல்கி ஆசிரியர் அவர்கள் தமது இலங்கைப் பயணம் பற்றி எழுதும் பொழுது பேரின்பநாயகம் அவர்களது ஆற்றலையும் பணிகளையும் பல சந்தர்ப்பங்களிலே விதந்து பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழி உயர் கல்வியிலும் மேலெழுந்து நிலை பெற வேண்டுமென்று வலியுறுத்திய அவர் அதற்குரிய தமது புலமைப் பங்களிப்பையும் வழங்கினார். பேரின்ப நாயகம் அவர்கள் தமிழில் எழுதிய அட்சியியல் என்ற நூல் அரச அறிவியற் பாடத்துக்கு எம். ஏ. பட்டப் படிப்புவரை பயன்படுத்தப்படத்தக்கது என்ற பாராட்டைப் பெற்றமை ஒரு முக்கியமான அவதானிப்பு ஆகும்.
தமது கல்லூரியின் செயற்பாட்டை உலக தொடர்புகளுக்கு இட்டுச் சென்று ஊடாட்டங்களை ஏற்படுத்திய முன்னுதாரணங்களையும் அவர் உருவாக்கினார். வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமயத்தலைவர்கள் முதலியோர் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு மாணவர் மத்தியிலே உரை நிகழ்த்துவதற்குரிய ஏற்பாடுகளை அவர் மேற்கொண்டார். அந்த செயற்பாடு ஏனைய கல்லூரிகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்தது.
காந்திய கோட்பாடுகள் மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்த அவர் காந்திய ஒழுக்கத்தையும் நடை முறைகளையும் பின்பற்றி வந்தார். கதர் ஆடைகளையே எப்பொழுதும் அணிந்து வந்தார். மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன் தொழிற் கல்வியும் பயின்று கொள்ள வேண்டும் என்ற காந்திய நோக்குடன் சுழிபுரத்திலிருந்த இராமநாதர் என்ற தொழிற் கல்வி வல்லுனரை அழைத்து வந்து மாணவர்க்கு செயலனுபவங்களுடன் கூடிய தொழிற் பாடங்களை கற்பிக்க ஏற்பாடுகளைச் செய்தார்.
மகாத்மா காந்தியை இலங்கைக்கு வரவழைக்கும் செயற்பாட்டையும் அவரே முன்னெடுத்தார். காந்தியை வரவழைக்க அவர் எழுதிய கடிதங்கள் காந்திய தரிசனத்தில் அவர் கொண்டிருந்த பற்றுதியை ஆழ்ந்து வெளிப்படுத்தியுள்ளது என்று கல்கி சிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
காந்தியக் கருத்தியலுக்கும் மார்க்சியக் கருத்தியலுக்குமிடையே குறிப்பிட்ட நிலைகளிலே காணப்பட்ட ஒப்புமைகளைத் தமது உரைகளிலும் எழுத்தாக்கங்களிலும் தெளிவுபெற வெளிப்படுத்தினார். மேலும் ஆசிரிய வாண்மை நிலையிலும் அவர் மேற்கொண்ட பங்களிப்புக்கள் விதந்து குறிப்பிடத்தக்கவை.
இலங்கையின் அனைத்து இன ஆசிரியர்களையும் உள்ளடக்கிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவராக அவர் ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டமை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். அனைத்து இன ஆசிரியர் மத்தியில் அவருக்கு இருந்த பெரு மதிப்பினையும் கௌரவத்தையும் அந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது.
ஆசிரியர்களின் கௌரவமும், வாண்மை மேம்பாடும் சமூக அந்தஸ்தும் தொடர்பான கருத்துக்களை அவர் தமது உரைகளிலும் அறிக்கைகளிலும் முன்வைத்தார்.
அனைத்து இன மக்களையும் அனைத்து மத மக்களையும் கௌரவத்துடன் ஒன்றினைத்தே தேசிய ஐக்கியம் கட்டியேழுப்பப்படல் வேண்டும் என்ற கருத்தில் அவர் தளராத உறுதி கொண்டிருந்தார். இலங்கையின் விடுதலைப் போராட்டங்களிலும் அதே நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். அந்நிலையில் அவற்றை இடதுசாரிகளின் கருத்தியலோடு பேரின்பநாயகம் அவர்களின் உறவுகள் பலம் பெற்று வளர்ச்சியடைந்திருந்தன.
தனி சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டவேளை அவர் மனமுடைந்து வேதனையடைந்தாதர். சிறுபான்மையினரின் மொழியுரிமை, மத உரிமை வாழ்விட உரிமை, பண்பாட்டு உரிமை முதலியவற்றை உரிய முறையிலே பாதுகாக்காமல் உறுதிவாய்ந்த தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்ற கருத்தினைத் தமது எழுத்தாக்கங்கள் வாயிலாகத் தெளிவுபடுத்தினார்.
தாம் வாழ்ந்த காலத்தைச் செறிவுடனும், வினைத்திறனுடனும் திறனாய்வுடனும் பயன்படுத்திய புலமையாளராயும் வினைப்பாட்டாளராயும் அவர் விளக்கினார். அவரது வாழ்வும் வளமும் சமூக பயன்பாட்டுடனும் இணைந்த கருத்தியலுடனும் சங்கமித்திருந்தன.