அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் சபாரத்தின முதலியார்

Dec 16, 20110 comments



யாழ்ப்பாணம் கொக்குவிற் பதியில் முல்லைத்தீவிலே எழுதுவினைஞராக பணியாற்றி வந்த சபாபதிப்பிள்ளை என்பாருக்கும் அவரது துணைவியார் ஆச்சிமுத்துவிற்கும் 1858ம் ஆண்டு சித்திரை மாதம் மூன்றாம் நாள் பிறந்தவர்தான் சபாரத்தின முதலியார்
. ஆரம்பக் கல்வியை சூழலில் நிறைவு செய்து கொண்ட அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த கல்விமான்களில் ஒருவரான சுயம்புநாதரிடம் தமிழ் பயின்றார். இப்பொழுது மத்திய கல்லூரி என்று வழங்கும், ‘கொக்’ பாடசாலையில் ஆங்கிலங் கற்றார். வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நல்லை ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரிடம் தமிழுஞ் சமயமும் கற்றார். நாவலரின் அருட்பார்வையினாலே சபாரத்தின முதலியார் தன் பத்தொன்பதாவது வயதிலிருந்து சமயப்பணி ஆற்றத்தொடங்கினார்.
சபாரத்தின முதலியார் காலத்திலே சாள்ஸ் பிரட்லாங் என்னும் பெயரையுடைய கிறீத்தவ தத்துவஞானி ஒருவர் புகழ்பெற்ற பண்டிதராக இருந்தார். எல்லாம் இயற்கை, மேலே எந்த சக்தியுமில்லை. நாம் காண்பவை உண்மையானவை. அவையெல்லாம் இயற்கைத் தோற்றங்கள் என்ற வகையிலான நிரீச்சுரவாதக் கொள்கையை உடையவர் அவர். தம் கொள்கையை பரப்பும் பல வெளியீடுகளையும் வெளியிட்டார். கொள்கைப் பிரகடனங்களை பத்திரிகைகளிலும் வரச்செய்தார். இவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சபாரத்தின முதலியார், அவர் பிரச்சாரங்களை பொறுத்துக்கொள்ளாதவராகி தருக்க முறையில் அவர் சிந்தனைகளை மறுத்துரைத்தார். தம் சிந்தனைகளை வெளியிடுவதற்குத், தமிழ் இதழ்களை தம் வயப்படுத்திக்கொண்டார். உதயபானு எனும் தமிழ்ச்செய்தி இதழ் சபாரத்தின முதலியாரின் கட்டுரைகளை ஒழுங்காக பிரசுரித்தது. இக்கொள்கைக்கு எதிராக சபாரத்தின முதலியார் எழுதிய கட்டுரைகள், ‘ஈசுர நிச்சயம்” என்னுந் தலைப்புடன் ஒரு நூலாகி 1896இல் வெளிவந்ததுண்டு.
1878 இல் அரச எழுதுவினைஞராக பதவிஏற்ற இவர் இலங்கையின் பலபாகங்களிலும் பணிபுரிந்த பின்னர், மீண்டும் யாழ்ப்பாணத்தை அடைந்து முதலியார் பதவியில் அமர்ந்தார். தொடர்ந்து பத்து ஆண்டுகள் உதவிப் பஸ்கால் பதவியையும் வகித்துள்ளார். இவரைக் கௌரவித்து அரசு 1905 இல் முதலியார் என்னும் விருதையும் 1919இல் இராசவாசல் முதலியார் என்னுஞ் சிறப்பான கௌரவ விருதினையும் அளித்து கௌரவப்படுத்தினர். 1917இல் அரசு இவருக்கு சமாதான நீதவான் எனும் கௌரவ விருதையும் வழங்கினர்.
பிரபஞ்ச விசாரம், சீவான்ம போதம், இந்து மதத்தின் முக்கிய அம்சங்கள், மறுபிறப்புண்மை, சரவணபவமாலை, நல்லை நான்மணி மாலை, கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டை மணிமாலை, கொக்குவில் சிவசுப்பிரமணியர் மும்மணிக்கோவை என்பன இவர் ஆக்கிய நூல்களிற் சில.
ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் மறைவின் போது முதலியார் அவர்கள் பாடிய கையறுநிலை வருமாறு.
சிவசமயக் கமலமதைத் தமிழ்நாடாந்
திருமடுவிற் செறித்த வர்த்திப்
பவமயரற் தாங்கணுற்ற பரசமய
விருள்கடமைப் பதற வோட்டித்
தவநெறியாந் தேரினிடைத் தானியூர்ந்து
தற்பரனா மாழி சார்ந்தா
னவமகல வுலகுபெறு மாறுமுக
நாவலனா மனில யோனே.
திருத்தல யாத்திரையாக காசிவரை சென்று மீண்ட இவர், துந்துபி வருடம் ஐப்பசி மாதம் 30ம் திகதி (1922-11-15) இவ்வுலகவாழ்வை நீத்து பரமனடி சேர்ந்தார்.

Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger