கொக்குவில் புகையிரத நிலைய வீதிச்
சந்திக்கு வடக்கே காங்கேசன்துறை – யாழ்ப்பாணம்
வீதியின் கிழக்கே வீதி ஒரமாக இவ்வாலயம்
அமைந்துள்ளது. புதுக்கோவில் என அனைவராலும்
அழைக்கப்படும். இக்கோவில் 1865 ஆம்
ஆண்டை அண்மித்த காலத்தில் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அக்கால கட்டத்தில் இந்தச்
சூழலில் சைவ வேளாள மரபினராகிய
பதினைந்து குடும்பத்தினர் அவ்விடத்தில்
வாழ்ந்தனரென்றும் அன்றைய அப்பதினைந்து குடும்பத்
தலைவர்களது சிந்தனையின் விளைவாகத்தான் இப்
பெரிய புதுக்கோவில் உருவாகியுள்ளது எனவும் கூறப்படுகின்றது. இந்த ஆலயத்தை நல்ல முறையில்
செயற்படுத்த 1871 ஆம் ஆண்டில் சண்முகம்
முருகேசு என்றவர் தலைமையில் வேலாயுதர்
முருகேசு, சட்டநாதர் சின்னப்பு,
சிறுத்தம்பு அம்பலவாயணர்,
தாமோதரம்பிள்ளை ஆகியோரைக் கொண்ட பஞ்சகர்த்தா சபையொன்று உருவாக்கப்பட்டது. இப் பஞ்சகர்த்தா சபையின் முயற்சியில் ஆலயம்
அமைப்பதற்கான நிலம் கொள்வனவு செய்யப்பட்டது.
இந்நிலத்துடன் சண்முகம் முருகேசு எனும் பெரியார்
தமது காணியின்
ஒரு பகுதியை சேர்த்து வழங்கியுள்ளார். இந்த தரும
நிலத்தில் முன்னர் தீர்த்தக்கேணியொன்றும் மடம் ஒன்றும் இருந்திருக்க வேண்டுமெனவும் அம்மடம்
‘ஆடியபாதன் மடம்’ என அழைக்கப்பட்டது என்றும்
அதனாலேயே அந்நிலப்பகுதியை ‘ஆடியா மடத்தடி’
என்றும் ‘ஆடிய பாதன் மடத்தடி’ என்றும் சிலர்
குறிப்பிடுகிறார்கள் என்பதும் கர்ண பரம்பரையாக
வரும் வரலாறு. நிலக் கொள்வனவைத் தொடர்ந்து ஆலய வேலைகள்
ஆரம்பமாகி கர்ப்பக்கிரகம், மேல் விமானம், அர்த்த
மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம் என்பன
அமைக்கப்பட்டன. தென் மேற்கில் விநாயகருக்கான
சந்நிதியும் வடக்கில் திருமஞ்சனக் கிணறும்
அமைக்கப்பட்டன. வசந்த மண்டபத் திருப்பணியை அடுத்து வைரவமூர்த்தி பிரதிட்டை ந
பிரதிட்டை, வேணு கோபால மூர்த்தி பிரதிட்டை,
ஆறுமுகசாமி பிரதிட்டை முதலியன இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து பக்தர்களது ஆக்க பூர்வமான
திருப்பணி காரணமாக ஆலயம் புதுப் பொலிவு பெற
ஆரம்பித்தது. பூசை முறையாக நடைபெறுவதற்கு இக்கட்டான நிலை ஏற்பட்ட
ஒரு காலகட்டத்தில் முருகனடியார்கள் வீடுதோறும்
பிடியரிசிக் குட்டான்களிலே தினமும்
பிடியரிசி சேமித்து பின்னர்
அதனை பணமாக்கி கிரியைகள்
இடையூறின்றி நடைபெற உதவிய சந்தர்ப்பங்களும் உண்டு. இந்திய காக்கும் படையினரின்
நடவடிக்கை காரணமாக 1987 – 1990 காலப்
பகுதியில் ஆலயம் பெரும் சிதைவுக்குள்ளாகிய
போதும் முருகனடியார்களின் முயற்சியால் ஆலயம்
புனர் நிர்மாணம் செய்யப்பட்டு 1998 ஏப்ரல் 10 ஆம்
திகதி பங்குனி உத்தரத்தில் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது. இவ்வாலயத்தின்
முதல் பூசகராக இருந்த பெருமை சிவஸ்ரீ
சின்னப்பா ஐயர் அவர்களைச் சாரும். 1982 ஆம்
ஆண்டிலிருந்து சிவஸ்ரீ குமாரசாமி குருக்கள்
பரம்பரையினரே கோவில் பூசைகளை சிறப்புறச்
செய்து வருகின்றனர். வைகாசி பூரணைக்கு முதல் நாள் தேர்த் திருவிழாவும் வைகாசி பூரணையில்
தீர்த்தமும் நடைபெறுவதால் இவ்வாலயத்தின்
கொடியேற்றம் முதலான விழாக்கள் சித்திரையிலும்
கொடியிறக்கம் பூங்காவனம் என்பன ஆனியிலும்
நடைபெறுகிறது.